Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்ததால், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறக்க முடியாத நிலை ஏற்பட்டதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலை கருத்தில் கொண்டு, குறுவை மற்றும் சொர்ணவாரி பருவங்களில் நெல் உற்பத்தி பாதிக்கப்படாத வகையில், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடியை ஊக்குவிக்க ₹134 கோடி நிதி ஒதுக்கீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இயந்திர நெல் நடவு, நேரடி நெல் விதைப்பு, விதை உற்பத்தி மானியம், நெல் விதைகள், திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரக்கலவைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின் மானியத்திற்காக ₹7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு மொத்தம் ₹14,984 கோடி நிதி இந்தத் திருத்த வரவு–செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ