Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாள் முழுவதும் நீடித்த பரபரப்புக்குப் பிறகு காவல் நிலைய விசாரணை முடிந்து இரவு 8.15 மணியளவில் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் காலை அவரை தஞ்சாவூர் போலீஸார் கைது செய்தனர்.
அவரை அழைத்துச் செல்ல முயன்றபோது திமுகவினர் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி, செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதற்கிடையே, கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்திலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், விசாரணையை அன்றே முடித்து உதயநிதியை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி விசாரணை முடிந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த உதயநிதி ஸ்டாலினை வரவேற்க விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
உதயநிதி வந்ததும் அவருக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் விமான நிலையத்தில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் உதயநிதி ஸ்டாலின் உடன் முன்னாள் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம்,கே என் நேரு, சேகர்பாபு, எம் ஆர் கே பன்னீர்செல்வம், எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் உள்ளிட்டரும் சென்னை வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN