Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக அரசின் முதல் பட்ஜெட், கடந்த ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பெயர் மாற்றத்துடன் மீண்டும் அறிவித்துள்ள காப்பி-பேஸ்ட் பட்ஜெட்டாக அமைந்துள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
புதிய சிந்தனைகள், பொருளாதாரக் கொள்கைகள், வருவாயை உயர்த்தும் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் முதலீட்டு அறிவிப்புகள் இடம்பெறும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், பட்ஜெட் ஏமாற்றத்தை மட்டுமே அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலவச மடிக்கணினி, திருமண நிதியுதவி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குதல், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் அனைத்தும் கடந்த அரசுகளின் திட்டங்களின் தொடர்ச்சியே தவிர, புதிய அணுகுமுறையை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, பெண்களுக்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி, விவசாயிகளின் குழந்தைகளுக்கு இலவச உயர்கல்வி, பால் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மாநிலத்தின் வருவாயை உயர்த்தும் பொருளாதாரத் திட்டங்கள், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சீர்திருத்தங்களுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், பட்ஜெட் உரையின் பெரும்பாலான பகுதி முதலமைச்சரைப் புகழ்வதற்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அதேநேரத்தில், மத்திய அரசுடன் மோதல் போக்கை கைவிட்டு, சோலார் மின் உற்பத்தி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுடன் இணைந்து சில அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதை வரவேற்பதாகவும், மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதன் மூலம் மேலும் பல மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P