Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,
காவிரி பிரச்சினையில் தமிழக அரசு வறட்டு கௌரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் மரிய வில்சன் ஜெபமாலையுடன் வந்தது அவரது தனிப்பட்ட மத நம்பிக்கை என்றும், தனிநபர் மத நம்பிக்கையை இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்டம், மத நம்பிக்கைகளுக்கும் இடமளிக்கிறது என்றும், இதுகுறித்து பெரியார் விமர்சித்திருந்தாலும், பன்மைத்துவத்தை பாதுகாக்கும் நோக்கில் அம்பேத்கர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார் என்றும் தெரிவித்தார்.
இன்றைய பட்ஜெட்டும் பற்றாக்குறை பட்ஜெட்டாகவே இருக்கும் என கருதுவதாகவும், முழு பட்ஜெட்டை ஆய்வு செய்த பிறகே அதன் தாக்கத்தை மதிப்பிட முடியும் என்றும் அவர் கூறினார்.
புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், உடனடியாக புதிய திட்டங்கள் மூலம் பற்றாக்குறையை சரிசெய்ய முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், உதயநிதி தொடர்பான விவகாரத்தை தொடர்ந்து விவாதிப்பது தேவையில்லை; அது நேற்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது என்றார்.
காவிரி விவகாரம் குறித்து பேசிய அவர், பெங்களூரின் குடிநீர் தேவையை கிருஷ்ணராஜசாகர் அணை மூலம் பூர்த்தி செய்ய முடியும் நிலையில், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறுவது அரசியல் நோக்கம் கொண்டது என்று விமர்சித்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு, தமிழர்களின் உரிமை மற்றும் நலன் சார்ந்த பிரச்சினைகளை ஒருங்கிணைந்து முன்னிறுத்த வேண்டும் என்றும், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam