Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் பொது நூலகங்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள பொது நூலகங்களை நவீனப்படுத்த ரூபாய் பத்து கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
இது த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கல்வி மற்றும் நூலகத் துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிதியின் மூலம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட மைய நூலகங்கள், ஊராட்சி நூலகங்கள் மற்றும் நகர்ப்புற நூலகங்கள் படிப்படியாக புனரமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் கீழ் நூலகங்களில் புதிய நூல்கள் கொள்முதல் செய்யப்படுவதோடு, மாணவர்கள் நீண்ட நேரம் அமர்ந்து படிக்கும் வகையில் குளிரூட்டப்பட்ட வாசிப்பு அரங்குகள், அதிவேக இணைய வசதியுடன் கூடிய கணினிகள், டிஜிட்டல் நூலகம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பிரத்யேக பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து நூலகங்களிலும் இ-புத்தக சேவை விரிவுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் தமிழகத்தில் வாசிப்பு இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b