Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் புதிய ரயில்வே திட்டங்கள் குறித்து ராஜ்யசபாவில் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலை மேற்கோள் காட்டி, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில்,
தமிழ்நாட்டில் 1,874 கி.மீ. நீளத்தில் 19 ரயில்வே திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாகவும், திண்டிவனம்–நகரி, மொரப்பூர்–தர்மபுரி, திண்டிவனம்–திருவண்ணாமலை, அட்டிப்பட்டு–புத்தூர், சென்னை–கடலூர் உள்ளிட்ட புதிய ரயில் பாதைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் மொத்தம் 3,517 கி.மீ. நீளத்தில் 29 புதிய ரயில்வே ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் அரியலூர்–நாமக்கல் (பெரம்பலூர் வழியாக) புதிய ரயில் பாதை உள்ளிட்ட முக்கிய திட்டங்களும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தென் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த மணியாச்சி–நாகர்கோவில் இரட்டைப் பாதைத் திட்டம் நிறைவடைந்துள்ளதாகவும், திருவனந்தபுரம்–கன்னியாகுமரி இரட்டைப் பாதைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விழுப்புரம்–திருச்சி–நாகர்கோவில் 3 மற்றும் 4-வது ரயில் பாதைத் திட்டத்திற்கான ஆய்வுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மேம்பட்ட ரயில்வே இணைப்பு கிடைக்க நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் அதிமுக எம்.பி இன்பதுரை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ