கொள்முதல் விலை, பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை - வேளாண் பட்ஜெட் குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் விமர்சனம்
தமிழ்நாடு, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் ஆறாவது வேளாண் நிதிநிலை அறிக்கையும், த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டும் உழவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர
அன்புமணி


தமிழ்நாடு, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் ஆறாவது வேளாண் நிதிநிலை அறிக்கையும், த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டும் உழவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவரது அறிக்கையில்,

வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.15,167.62 கோடியிலிருந்து ரூ.14,696.70 கோடியாக, ரூ.470.92 கோடி குறைக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஊரக வளர்ச்சித் துறைக்கான கூடுதல் நிதியை கழித்துப் பார்த்தால், வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பும் இடைக்கால பட்ஜெட்டை விட ரூ.648 கோடி குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மொத்த மாநில பட்ஜெட்டில் 25 சதவீதம் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற பா.ம.க.வின் நீண்டகால கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 கொள்முதல் விலை வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும், பயிர்க்கடன் தொடர்பான புதிய அறிவிப்புகளும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தாமல், ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள் வழங்குவது போதுமான தீர்வாக இருக்காது என்றும், பயறு மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடியை அதிகரிக்கும் இலக்குகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான ஊக்கத்தொகை அறிவிக்கப்படாததால் திட்டம் வெற்றி பெறுவது சந்தேகமே என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், நெல் உள்ளிட்ட 10 வகை பயிர்களில் அதிக விளைச்சல் பெறும் உழவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு கடலூர் அஞ்சலையம்மாள் பெயர் சூட்டப்பட்டிருப்பதை அவர் வரவேற்றார். வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளிக்கும் போது, உழவர்களுக்கு பயனளிக்கும் புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P