Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் செயல்பட்டு வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்ளிட்ட மூவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன், தொழிற்சாலை மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங் மற்றும் தொழிலாளர் முகவர் சுரேஷ் ஆகியோரை திருவள்ளூர் போலீசார் கைது செய்தனர்.
இதில், ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் டேனியல் டைட்டஸ் சிங் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி சி. குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.
அதேவேளை, மனுதாரர்கள் தரப்பில் 50 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சி. குமரப்பன், உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு குறித்து பின்னர் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தற்போது வழங்கப்படும் இழப்பீடு, அரசு அல்லது விசாரணை ஆணையம் எதிர்காலத்தில் நிர்ணயிக்கும் கூடுதல் இழப்பீடுகளை பெறுவதற்கான உரிமையை பாதிக்காது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், மறு உத்தரவு வரும் வரை தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையொப்பமிட வேண்டும், காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மூவருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam