Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா , 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், பிதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பவன் கல்யாண், தனது தொகுதியின் வளர்ச்சிப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
பிதாபுரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றும் நோக்கில், கிராமப்புறங்கள் முதல் நகரப் பகுதிகள் வரை பல்வேறு அடிப்படை வசதி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பிதாபுரம் தொகுதியில் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரூ.200 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சாஸ்கி, சாலை மற்றும் கட்டிடத் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவற்றின் நிதி மூலம் தொகுதி முழுவதும் 307 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் ரூ.100 கோடி செலவில் 152 கிலோமீட்டர் தூரத்துக்கு 611 சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன.
மேலும் 70 சாலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மொத்த சாலை வளர்ச்சி பணிகளில் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை பணிகளால் கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நீண்ட காலமாக சந்தித்து வந்த போக்குவரத்து சிரமங்கள் குறைந்துள்ளன.
தொலைதூர கிராமங்கள் மற்றும் மீனவர் குடியிருப்பு பகுதிகளுக்கும் சிறந்த சாலை இணைப்பு கிடைத்துள்ளது.
உப்பாடா கடற்கரை பகுதியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட மாயாபட்டணம் மீனவர் குடும்பங்களுக்காக சுப்பம்பேட்டை அருகே அமைக்கப்பட்ட புதிய மறுவாழ்வு குடியிருப்பில் ரூ.1.52 கோடி செலவில் 1.5 கிலோமீட்டர் கான்கிரீட் சாலையும், 2.8 கிலோமீட்டர் நீளத்துக்கு வடிகால் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கொத்தசூராடபேட்டை குடியிருப்பு பகுதிக்கு ரூ.93 லட்சம் செலவில் 1.6 கிலோமீட்டர் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு, முக்கிய சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
புயலால் சேதமடைந்த யு.கொத்தபள்ளி மண்டலத்தில் உள்ள அமரவில்லி மற்றும் ராமண்ணபாளையம் கடற்கரை சாலை ரூ.88 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியில் பின்தங்கியிருந்த மும்மடிவாரிப்பாடு கிராமத்திற்கு ரூ.79.70 லட்சம் செலவில் நிரந்தர சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொத்தபள்ளி கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ரூ.26.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு, சுமார் 4 ஆயிரம் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 7 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த பிதாபுரம்-உப்பாடா ஆர்&பி சாலை ரூ.1.22 கோடி நிதியில் அவசர அடிப்படையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை மூலம் மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்பட சுமார் 8 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
பிதாபுரம் தொகுதியில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சாலை மற்றும் அடிப்படை வசதி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA