ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர்கள் பட்டியல் எப்போது? – உயர்கல்வித்துறை அமைச்சரிடம் அறப்போர் இயக்கம் கேள்வி
சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச) ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் தொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதனிடம் விளக்கம் கோரி அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், 2026 ஜூலை 24-
Arappor


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச)

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் தொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதனிடம் விளக்கம் கோரி அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில்,

2026 ஜூலை 24-ஆம் தேதிக்குள் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் முதல்வர்களை நியமித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தாலும், இதுவரை தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் முதல்வர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர்களை நியமிக்காத தனியார் கல்லூரிகள் எவை, அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, பல்கலைக்கழக உத்தரவை பின்பற்றாத கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டதா என்பன உள்ளிட்ட கேள்விகளை அறப்போர் இயக்கம் எழுப்பியுள்ளது.

காலக்கெடு அறிவிப்பதோடு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு முடிந்துவிட்டதா அல்லது விதிமுறைகளை அமல்படுத்தும் அதிகாரமும் விருப்பமும் உள்ளதா என்றும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், 2026–27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், விதிமுறைகளை பூர்த்தி செய்துள்ள கல்லூரிகளின் பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான இந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பட்டியல் எப்போது வெளியிடப்படும், அமைச்சர் விஸ்வநாதன் அவர்களே? என்று கேள்வி எழுப்பி, வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகப் பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ