Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச)
2026–27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேளாண் காடுகள் திட்டம் ஆகியவற்றை வேளாண் துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.
மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்:
தமிழ்நாட்டில் கோழித்தீவனம் மற்றும் எத்தனால் தொழிற்சாலைகளுக்கு மக்காச்சோளம் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்து, விவசாயிகள் அதிக வருமானம் பெறும் நோக்கில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் 2026–27ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டம் 3.47 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு, 1.39 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். இதற்காக ரூ.36 கோடி (ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதி) ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் காடுகள் திட்டம்:
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமைச் சூழலை உருவாக்கவும் வேளாண் காடுகள் திட்டம் 2026–27ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும்.
இதற்காக ரூ.17.70 கோடி (ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதி) ஒதுக்கப்பட்டு, நாற்றங்கால்கள் அமைத்து தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
மேலும், 12,500 ஏக்கர் சாகுபடிக்கு ஏற்ற தரிசு நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு, தேக்கு, மகோகனி, சந்தனம், மலைவேம்பு, செம்மரம் உள்ளிட்ட பொருளாதார மதிப்புமிக்க மரவகைகள் ஒரு ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வீதம் நடவு செய்யப்பட்டு வேளாண் காடுகள் உருவாக்கப்படும்.
இந்தத் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதுடன், நிலையான வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மேம்படும் என அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ