தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் கார் விபத்து வழக்கு – சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு!!
சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) 2013-ம் ஆண்டு மே 22 அன்று, EMPEE குழுமத் தலைவர் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமன், தனது நண்பர்களுடன் மதுபோதையில் காரை ஓட்டியுள்ளார். சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந
Businessman Shaji Purushothaman car accident case


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

2013-ம் ஆண்டு மே 22 அன்று, EMPEE குழுமத் தலைவர் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமன், தனது நண்பர்களுடன் மதுபோதையில் காரை ஓட்டியுள்ளார்.

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் முனிராஜ் என்ற சிறுவன் பலியானான்.

மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கு கடந்த ஜூலை 30, 2026 அன்று, சென்னை 7-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.ஸ்ரீகுமார், ஷாஜி புருஷோத்தமனை குற்றவாளி என அறிவித்து 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று ஷாஜி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷாஜி புருசோத்தமன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுவில், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் சட்டரீதியான குறைபாடுகள் இருப்பதாகவும், தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மேல்முறையீடு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வரும் 13ஆம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையின் பதில் கிடைத்த பிறகு, மேல்முறையீட்டு மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை உயர்நீதிமன்றம் மேற்கொள்ள உள்ளது.

இந்த வழக்கின் முடிவு, கடந்த மாதம் வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பு தொடருமா அல்லது அதில் மாற்றம் ஏற்படுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

Hindusthan Samachar / vidya.b