2026–27 பட்ஜெட்டில் ரூ.27.21 கோடியில் 'பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்' – அமைச்சர் வினோத் அறிவிப்பு
சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) 2026–27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், மாநிலத்தின் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் என்ற புதிய ஐந்தாண்டுத் திட்டத்தை வேளாண் துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். இந்தியாவின் மொத்த
Vinoth


Co


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

2026–27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், மாநிலத்தின் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் என்ற புதிய ஐந்தாண்டுத் திட்டத்தை வேளாண் துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மொத்த நூற்புத் திறனில் 46 சதவீதம், விசைத்தறித் திறனில் 22 சதவீதம், கைத்தறித் திறனில் 12 சதவீதம் மற்றும் பருத்தி பின்னலாடை உற்பத்தியில் 70 சதவீதம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

இதனால், நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது.

'வெள்ளைத் தங்கம்' மற்றும் 'King of Fibre' என அழைக்கப்படும் பருத்தி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 3.14 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 2.50 லட்சம் பருத்திப் பொதிகள் (Bales) உற்பத்தி செய்யப்படுகின்றன.

இருப்பினும், மாநிலத்தில் செயல்படும் பருத்தி நூற்பாலைகளின் 120 லட்சம் பொதிகள் தேவையில் 98 சதவீதம் பிற மாநிலங்களிலிருந்தே பெறப்படுகிறது.

இந்தச் சார்பைக் குறைக்கும் வகையில், அடர் நடவு, நெருக்க நடவு, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, நுனிக்கிள்ளுதல் உள்ளிட்ட உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், மிக நீண்ட இழை பருத்தி மற்றும் ஊடுபயிர் சாகுபடி மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் 2026–27 முதல் ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும். நடப்பாண்டில் 73,360 ஏக்கர் பரப்பளவில் ரூ.27.21 கோடி (ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதி பங்களிப்புடன்) செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 40 ஆயிரம் பருத்தி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ