சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை
சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் நேற்று (05.08.2026) தாக்கல் செய்தார். இதனை தொடர்
DMK MLAs arrive at the Legislative Assembly wearing black shirts


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் நேற்று (05.08.2026) தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (06.05.2026) தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட்டில் விவசாய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா? என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே நிறத்தில் கருப்புச் சட்டை அணிந்து அணிவகுத்து வந்தனர்.

மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் அழுத்தம் கொடுக்கத் தவறிவிட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

சட்டப்பேரவைக்குள் நுழையும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. உறுப்பினர்கள்,

காவிரி தமிழ்நாட்டின் உயிர்நாடி என்றும், மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக அரசு மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகவும், தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கும் வகையில் செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.

தங்களது எதிர்ப்பை அடையாளப்பூர்வமாக வெளிப்படுத்தவே கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளதாக அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b