Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை சுட்டிக்காட்டியும், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் முன்பு செவிலியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென் மண்டல செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 204-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், எம்.ஆர்.பி. (MRB) மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 8,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் செவிலியர்களுக்கு நர்சிங் ஆபிஸர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல செயலாளர் ஜோதி,
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய செவிலியர்கள் இல்லாத நிலையில், பணியாற்றி வரும் செவிலியர்களை வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றும் வகையில் அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் என நம்பிக்கை தெரிவித்த அவர், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றும் எச்சரித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென் மண்டல துணைத் தலைவர் மாரியம்மாள், மாவட்டச் செயலாளர் ஜாய்ஸ் கரோலின், மாவட்டத் தலைவர் சகாயராணி, செவிலியர் கண்காணிப்பாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam