Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், வழக்கம் போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் ஏறி உள்ளார்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பேருந்தின் படியில் நின்றபடி பயணித்து உள்ளார்.
அப்போது, அதே பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்து, அவருக்குப் பாலியல் சீண்டல் கொடுத்துத் தொல்லை அளித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, இச்சம்பவம் குறித்துப் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.
மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பாலியல் தொல்லையில் ஈடுபட்டது போத்தனூர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, காவலர் மணிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார், அவரை கைது செய்தனர்.
பாதுகாப்பளிக்க வேண்டிய காவலரே பேருந்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN