Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த நிலையில், தற்போது வினாடிக்கு 19,000 கன அடியாக நீடித்து வருகிறது. நேற்று 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரே இந்த நீர்வரத்துக்கு முக்கிய காரணமாகும்.
நீர்வரத்து இன்னும் அபாய அளவுக்கு அருகில் இருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றுப் பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3வது நாளாக தடை விதித்துள்ளது. அதேபோல், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் பரிசல் இயக்கமும் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஒகேனக்கல் மற்றும் பிலிகுண்டுலு பகுதிகளில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி கரையோர மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆற்றுப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam