மதுரை அருகே மதுபோதையில் லாரி ஓட்டி அடுத்தடுத்து விபத்து - ஒருவர் பலி, 10-க்கும் மேற்பட்டோர் காயம்
மதுரை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, மதுபோதையில் லாரியை இயக்கிய ஓட்டுநர் அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 10-க்கும் மேற்பட
விபத்து


மதுரை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, மதுபோதையில் லாரியை இயக்கிய ஓட்டுநர் அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போலீசார் தெரிவித்ததாவது: நகரி பகுதியிலிருந்து ஆரோக்கியா பால் நிறுவன லாரியை, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (29) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர் மதுபோதையில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது.

அலங்காநல்லூர் அருகே சாலையோரத்தில் இருசக்கர வாகனத்துடன் நின்றிருந்த முத்துப்பாண்டி மீது முதலில் லாரி மோதியது.

ஆனால், லாரியை நிறுத்தாமல் தொடர்ந்து சென்ற ஓட்டுநர், வழியெங்கும் எதிரே மற்றும் முன்னால் சென்ற 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொதுமக்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் லாரியை விரட்டி, நத்தம்–மதுரை சாலையில் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், ஓட்டுநர் ஜெயப்பிரகாசை தாக்கியதுடன், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லாரி ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா என்பது தொடர்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam