Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு சீரழித்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
2006-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சோனியா காந்தியின் முயற்சியால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை கொண்டு வந்ததாகவும், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அதனை புறக்கணிக்கும் அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடித்ததுடன், நிதி ஒதுக்கீட்டையும் குறைத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி புதிய பெயரில் திட்டத்தை செயல்படுத்தியதுடன், மத்திய அரசின் நிதிப் பங்களிப்பை 80 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைத்து, மாநிலங்களின் நிதிச் சுமையை 40 சதவீதமாக உயர்த்தியிருப்பது மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 31 வரை உருவாக்கப்பட்ட மனித வேலைநாட்கள் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 34 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறிய மாணிக்கம் தாகூர், புதிய விதிமுறைகளால் கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam