Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழக அரசின் மெட்ரோ ரயில் திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் 2026–27 பட்ஜெட் தொடர்பாக முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்து, முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் முழுமையடைந்த போரூர்–வடபழனி மெட்ரோ ரயில் சேவையையும், அவரது முயற்சியால் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள சென்னை விமான நிலையம்–கிளாம்பாக்கம், கோயம்பேடு–பட்டாபிராம் மற்றும் பூந்தமல்லி–சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் திட்டங்களையும் தற்போதைய அரசு தனது சாதனையாகக் கூறி ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளிக்காத மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் மவுனம் காப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, தேர்தலுக்கு முன் பெண்களுக்கு மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயணம், குடும்பத்திற்கு ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை, மீனவர்களுக்கு டீசல் மானியம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் அவற்றை நிறைவேற்றாமல் பட்ஜெட்டில் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
இறுதியாக, ஜனநாயகன் திரைப்படத்துடன் நடிப்பை நிறுத்துவதாக கூறிய நீங்கள், தற்போது 'தமிழக முதலமைச்சர்' என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டீர்களே, முதல்வர் அவர்களே? என்று பதிவில் அப்பாவு விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ