Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
2026–27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், காட்டுப்பன்றி மற்றும் பிற வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க ரூ.7.35 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.
பண்டைய காலம் முதலே வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க பல்வேறு முறைகள் பின்பற்றப்பட்டதை சங்க இலக்கியங்களான மலைபடுகடாம் எடுத்துரைக்கிறது.
இருப்பினும், அண்மைக் காலங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் தொடர்ந்து சேதமடைந்து, விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) உருவாக்கிய சுற்றுச்சூழலுக்கு உகந்த திரவ வடிவிலான காட்டுப்பன்றி விரட்டி மருந்து, 14 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரூ.1.35 கோடி மாநில நிதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
மேலும், காட்டுப்பன்றி மட்டுமின்றி யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தைக் குறைக்கும் வகையில், 134 விவசாயிகளுக்கு ரூ.2 கோடி செலவில் சூரிய சக்தியால் இயங்கும் மின்வேலிகள் மானியத்தில் அமைத்துத் தரப்படும்.
அதேபோல், பல மாவட்டங்களில் காட்டுப்பன்றிகளின் வாழ்விடமாக மாறியுள்ள சீமைக் கருவேல மரங்களை அரசு மற்றும் தனியார் நிலங்களில் இருந்து அகற்றும் பணிகள் ரூ.4 கோடி மாநில நிதியில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பயிர் சேதத்தை குறைத்து, விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாப்பதுடன், மண் வளம் மற்றும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ