Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சிறுதானியம் மற்றும் குறுதானியங்களின் சாகுபடிப் பரப்பை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மற்றும் தமிழ்நாடு குறுதானிய இயக்கம் ஆகிய திட்டங்களுக்கு 2026–27ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.71.42 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.
அதிக சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 2026–27ஆம் ஆண்டில் உழவர் குழுக்கள் அமைத்தல், மாற்றுப்பயிர் சாகுபடிக்கான மானியம், சிறுதானிய விதைகள் விநியோகம், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் முதன்மை பதப்படுத்தும் மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதியுடன் ரூ.63 கோடியே 81 லட்சம் செலவில் செயல்படுத்தப்படவுள்ளன.
இதன் மூலம் 11 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 4 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வறட்சியைத் தாங்கக்கூடிய மற்றும் குறைந்த நீர்த்தேவை கொண்ட சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு உள்ளிட்ட குறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு குறுதானிய இயக்கம் 2026–27ஆம் ஆண்டில் 29 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக மாநில நிதியிலிருந்து ரூ.7 கோடியே 61 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் குறுதானியங்களின் சாகுபடிப் பரப்பை தற்போதைய அளவிலிருந்து இருமடங்காக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ