Enter your Email Address to subscribe to our newsletters

மேட்டுப்பாளையம், 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரெயில் உள்ளூர் மக்களால் பொம்மை ரயில் என்று அன்போடு அழைக்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற ஒரு பாரம்பரியச் சுற்றுலா ஈர்ப்பாக உள்ள இந்த மலை ரெயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,200 அடி உயரத்தில் உள்ள ஊட்டிக்கு (உதகமண்டலம்), மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் பாதைக்கு, கடந்த 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மலைரெயில் மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடையும்.
இந்த ரெயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோடைகால சிறப்பு மலை ரெயிலை கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் ஜூலை மாதம் 5-ந் தேதி வரை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் இயக்கியது.
இந்த சிறப்பு மலை ரெயிலுக்கு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவையை மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு செய்து ஜூலை மாதம் 10-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை வாரத்தில் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும், இதே போன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஜூலை மாதம் 11-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை சனிக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய 2 நாட்களும் இயக்கப்பட்டது.
தற்போது சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் மீண்டும் 2 மாதத்திற்கு மேட்டுப்பாளையம்-ஊட்டி, ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலைரெயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நாளை (ஆகஸ்ட் 07) முதல் வருகிற அக்டோபர் மாதம் 4-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது.
காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு செல்லும் மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும். இதே போன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாளை மறு நாள்(ஆகஸ்ட் 08) முதல் அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை சனி, திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும்.
ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை முதல் வகுப்பு 40 இருக்கைகளும், 2-ம் வகுப்பு 140 இருக்கைகளும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பு 80 இருக்கைகளும், 2-ம் வகுப்பு 140 இருக்கைகளும் ஒதுக்கப் பட்டு உள்ளது.
இது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / vidya.b