பழனி கோயில் நில மோசடி வழக்கு - ஒட்டன்சத்திரத்தில் நில புரோக்கர் வீட்டில் மீண்டும் சிபிசிஐடி சோதனை
திண்டுக்கல், 06 ஆகஸ்ட் (ஹி.ச.) பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சிபிசிஐடி விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கு தொடர்ப
பழனி


திண்டுக்கல், 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சிபிசிஐடி விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஒட்டன்சத்திரத்தில் நில புரோக்கர் ஜெயபிரகாஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று மீண்டும் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கைராசி நகரில் வசித்து வரும் ஜெயபிரகாஷ், இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அவரது வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், தற்போது கூடுதல் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்றும் நோக்கில் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, ஜூலை 18-ஆம் தேதி ஜஸ்டின் மணிகண்டனின் வீடு மற்றும் பத்திர எழுத்தர் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர்.

அந்த விசாரணையின் தொடர்ச்சியாக தற்போது ஜெயபிரகாஷ் வீட்டில் மீண்டும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam