Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, சென்னையின் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2025 ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவில், மதரீதியாக வெறுப்புணர்வை தூண்டுதல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொன்முடிக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 2-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சவுந்திர பாண்டியன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு கோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பொன்முடியை செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P