Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கொழும்பில் உள்ள நேரத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பது குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 2023 முதல் இதுவரை 1,306 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 179 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு அளித்த பதிலைச் சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இலங்கை கடற்படையின் தொடர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளுடன் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், இன்று (ஆகஸ்ட் 6, 2026) நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P