ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஆக.14-ல் தேரோட்டம்
விருதுநகர், 06 ஆகஸ்ட் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆண்டாள் – ஸ்ரீரங்கமன்னார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா, இன்று (ஆக.6) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 108 வைணவ தி
ஆண்டாள் கோவில்


விருதுநகர், 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆண்டாள் – ஸ்ரீரங்கமன்னார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா, இன்று (ஆக.6) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

108 வைணவ திவ்யதேசங்களில் முக்கியமான திருத்தலமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமியாக போற்றப்படுகிறது. ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த திருவிழாவில், கோவில் பட்டர்கள் கௌதம் பட்டர், வாசுதேவ பட்டர், அனிருத் பட்டர், பிரகாஷ் பட்டர், பாலாஜி பட்டர், சுதர்சன் பட்டர் உள்ளிட்டோர் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

திருவிழாவையொட்டி இன்று இரவு 16 சக்கரத் தேரில் உற்சவர் நான்கு ரத வீதிகளிலும் உலா வருகிறார்.

தொடர்ந்து ஆகஸ்ட் 10-ஆம் தேதி கருட சேவை, 12-ஆம் தேதி சயன சேவை நடைபெறவுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

எட்டு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீரங்கமன்னார் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் – ஸ்ரீரங்கமன்னாரை தரிசனம் செய்தனர். பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவில் செயல் அலுவலர் சக்கரைஅம்மாள் தலைமையில் கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும், திருவிழா நாட்களில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் தினமும்

50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam