Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள டி. காணிகரஅள்ளி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறை இரும்புக் கதவை திறந்தபோது 9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தாமரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த தொடக்கப் பள்ளியில் 114 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குச்சாவடி மையத்திற்காக அமைக்கப்பட்ட தற்காலிக மின் இணைப்பு, மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை வழியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இரும்புக் கதவை திறக்கும், மூடும் போது மின் கம்பி உராய்ந்து, கதவிலேயே மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாணவர்கள் கழிப்பறை கதவை திறந்தபோது 9 பேர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தனர்.
அக்கம்பக்கத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அனைத்து மாணவர்களும் வீடு திரும்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நல்லம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ண தேஜஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கழிப்பறையில் மின் இணைப்பு பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததுடன், வகுப்பறை, கழிப்பறை மற்றும் சமையலறை உள்ளிட்ட பகுதிகளில் மின் பாதுகாப்பை முறையாக கண்காணிக்கத் தவறியதாகக் கூறி, தலைமை ஆசிரியர் செந்தாமரையை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தென்றல் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P