Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்தியாவில் கடந்த மாதம் அதிக அளவில் மின்சார வாகனங்கள் பதிவான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், எரிபொருள் இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசும், மாநில அரசுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் ஃபேம் திட்டத்தின் கீழ் மானியம், சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் தனது மின்சார வாகனக் கொள்கையின் மூலம் உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் பல்வேறு ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் நாடு முழுவதும் பதிவான மின்சார வாகனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக இரு சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் பதிவு அதிகளவில் உயர்ந்துள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழில் நகரங்களான சென்னை, கோவை, ஓசூர் ஆகிய பகுதிகளில் மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அதிகரித்திருப்பதும், சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மின்சார வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் மாதங்களில் தமிழகம் முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b