தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சர்ச்சை உறவினர்கள் முற்றுகை - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
செங்கல்பட்டு, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி மருத்
மருத்துவமனை


செங்கல்பட்டு, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோயாளிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்

இரும்புலியூரைச் சேர்ந்த தங்கராஜ் (48), முடி திருத்தும் கடையில் பணியாற்றி வருகிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு இடது கால் பாதத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக முதலில் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

அங்கு காலில் உள்ள கட்டை விரலை மட்டும் அகற்றுவதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், பின்னர் காலின் மற்ற பகுதிகளிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தங்கராஜின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

மேலும், போதிய அனுபவமுள்ள மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவ மாணவர்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்ததாகவும், மருத்துவர்கள் நேரத்திற்கு வருவதில்லை, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாம்பரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் விளக்கம் கேட்டபோது திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என கூறிய தங்கராஜின் மனைவி ரம்யா, மகள் பூஜா, மகன் அருண் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, தவறு செய்த மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நோயாளிக்கு உரிய மேல் சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை நிர்வாகம், தங்கராஜுக்கு மருத்துவ விதிமுறைகளின்படி உரிய சிகிச்சை வழங்கப்பட்டதாக தெரிவித்தது.

அவரது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், அங்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கும் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்தது.

மேலும், நோயாளிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்த நிலையில், அதனை மேற்கொள்ளாமல் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

நோயாளி குடும்பத்தினரின் குற்றச்சாட்டும், மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கமும் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam