Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுச்சேரி காவல் துறையின் சார்பில் ‘வண்ண விருது’ வழங்கும் விழா புதுச்சேரி காவல் மைதானத்தில் கடந்த மாதமே நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
நீண்டகால சிறப்பான சேவை, மிகச் சிறந்த ஒழுக்கம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்கள் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, குடியரசுத் தலைவரின் உயரிய ‘வண்ண விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயரிய விருதினை வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று விருதினை வழங்கவிருந்தார்.
ஆனால், டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த காரணத்தால், அவரது பாதுகாப்பு கருதி புதுச்சேரி பயணம் அப்போது ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விழா தற்போது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8-ம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.
8-ம் தேதி இரவு, புதுச்சேரி வந்தடையும் அமித் ஷா, அன்றைய தினம் அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் 9-ம் தேதி காலை புதுச்சேரி காவல் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்று, புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் ‘வண்ண விருதினை’ வழங்கி கவுரவிக்கிறார்.
9-ம் தேதி மதியம், புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, திருவண்ணாமலைக்குச் செல்கிறார்.
அங்குள்ள புகழ்பெற்ற ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
பின்னர், திருவண்ணாமலையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கு தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, அன்று இரவே அமித் ஷா தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b