அண்ணல் அம்பேத்கர் திட்டத்தில் 316 மாணவர்களுக்கு விசா தாமதம் – UK துணை உயர் ஆணையரிடம் பிரவீன் சக்கரவர்த்தி வலியுறுத்தல்
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில 316 மாணவர்கள் முழு நிதியுதவி பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் கல்வியைத் தொடருவதற
பிரவீன்


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில 316 மாணவர்கள் முழு நிதியுதவி பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்கள் கல்வியைத் தொடருவதற்கான நிதியுதவியை தமிழக அரசிடம் இருந்து பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கான UK மாணவர் விசாக்கள் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, படிப்பு தொடங்கும் காலக்கெடு உள்ளிட்டவை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி, இன்று இங்கிலாந்து துணை உயர் ஆணையரை நேரில் சந்தித்து, 316 மாணவர்களின் நிலை குறித்து எடுத்துரைத்துள்ளார்.

மேலும், தமிழக அரசின் முழு நிதியுதவியுடன் உயர்கல்வி பயிலச் செல்லும் திறமையான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, விசா விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ள பிரவீன் சக்கரவர்த்தி,

மாணவர்களின் பிரச்சினையை இங்கிலாந்து துணை உயர் ஆணையரிடம் எடுத்துரைத்து முறையிட்டதாகவும், இந்தத் திறமைமிக்க தமிழ் மாணவர்களுக்கு உதவும் வகையில் விவகாரத்தை உடனடியாக ஆராய்ந்து தீர்வு காண்பதாக இங்கிலாந்து துணை உயர் ஆணையர் கனிவுடன் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P