டி.எஸ்.சி முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஏன் பயம்? - ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி
விஜயவாடா , 07 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தில் டிஎஸ்சி-2025 ஆசிரியர் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் நியமன முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி
A


விஜயவாடா , 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தில் டிஎஸ்சி-2025 ஆசிரியர் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் நியமன முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டிஎஸ்சி முறைகேடுகளை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மீது அரசு அடக்குமுறையை கையாள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

விஜயவாடாவில் சிபிஐ விசாரணை கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாகவும், போராட்ட முகாம் சேதப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்எல்ஏ மல்லாடி விஷ்ணு உள்ளிட்டோர் மீது கற்கள், முட்டைகள், தக்காளி வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஜெகன் கூறியுள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் முன்னிலையில் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்ட முகாம்கள் அகற்றப்பட்டு, தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

லோகேஷ் மீது குற்றச்சாட்டு

கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷை பாதுகாப்பதற்காகவே முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு இவ்வாறு செயல்படுகிறது என்று ஜெகன் குற்றம் சாட்டியுள்ளார்.

டிஎஸ்சி தேர்வு நடைமுறை வெளிப்படையாக நடைபெற்றதாக அரசு கூறும்போது, முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் தயக்கம் காட்டுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், டிஎஸ்சி நியமன முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் பதவி விலக வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள கல்வி உதவி மற்றும் விடுதி உதவி தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியின்படி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகையை கடந்த 2 ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்றும் ஜெகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டங்களை ஒடுக்கலாம், ஆனால் டிஎஸ்சி முறைகேடு தொடர்பான உண்மைகளை மறைக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று ஜெகன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA