Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம்
பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த தண்டபாணியின் மகள், அப்பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று மாலை பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மாணவியும், புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் அகஸ்டின் (24) என்பவரும் ஒத்திகைக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி, ஆசிரியர் தமக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெற்றோரிடம் அழுதபடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பள்ளி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காடாம்புலியூர் போலீசார், ஆசிரியர் அகஸ்டினை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்று பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் அகஸ்டின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam