Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட எரசக்கநாயக்கனூர், புத்தம்பட்டி மற்றும் பூசாரிகவுண்டன்பட்டி ஆகிய கிராம பகுதிகளை சேர்ந்த கர்ணல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர், சின்னமனூர் வனச்சரகம் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமுறை தலைமுறையாக, சுமார் ஐந்து தலைமுறைகளாக தங்கள் பாரம்பரிய மலை மாடுகளை வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்துபோன காலங்களில் இப்பகுதிகளில் 10,000-க்கும் மேற்பட்ட மலை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று வந்தன.
இதனால் இயற்கை உரங்கள் கிடைக்கப்பெற்று, அப்பகுதி விவசாய நிலங்களின் விளைச்சலும் செழிப்பாக இருந்தது.
அன்றைய காலகட்டங்களில் வனத்துறையினரும் முறைப்படி மேய்ச்சலுக்கான அனுமதி அட்டைகளை (லைசன்ஸ்) வழங்கி வந்தனர். ஆனால் தற்காலத்தில் விவசாய நிலங்களின் வீழ்ச்சி மற்றும் பல்வேறு காரணங்களால் மலை மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, தற்போது வெறும் 500 மாடுகள் மட்டுமே மேய்ச்சலுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, எஞ்சியிருக்கும் இந்த 500 மலை மாடுகளையும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவிடாமல் வனத்துறையினர் கடுமையாக தடுத்து நிறுத்தி கிடுக்குப்பிடி போட்டு வருகின்றனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டோடு மலை மாடுகளுக்கான மேய்ச்சல் லைசன்ஸ் காலம் நிறைவடைந்த நிலையில், அதன்பின்னர் தற்போது வரை புதிய லைசன்ஸ் வழங்க வனத்துறை அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்து வருகின்றனர்.
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்றவற்றில் களமிறக்கப்படும் வீரியமிக்க இந்த மலை மாடுகள், மேய்ச்சல் இன்றி அழியும் அபாயத்திற்கு வனத்துறையினரின் இந்த பிடிவாதப் போக்குதான் முதன்மை காரணமாக அமைகிறது.
இந்த சூழலில், ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை வனச்சரக அலுவலகம் முன்பாக தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டபோதிலும், அங்கிருந்த வனத்துறை அதிகாரிகள் எவரும் நேரில் வந்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்கவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ முன்வரவில்லை.
இதே வேளையில், சின்னமனூர் வனச்சரக அலுவலகத்தின் செயல்பாடானது பத்திரிகையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் முற்றிலும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
இது ஒரு மக்களுக்கான அரசு அலுவலகமா அல்லது வனத்திற்குள் அமைந்த தனித்துவ அதிகார மையமா என்ற பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.
பாமர மக்களோ அல்லது செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களோ நேரடியாக சென்று தங்களது புகார்களை தெரிவிக்கவோ அல்லது தகவல்களை பெறவோ முடியாத சூழலே இங்கு நிலவுகிறது.
'நாங்கள் சொல்வதே சட்டம்' என்ற போக்கில் செயல்படும் இவ்வலுவலகத்தினர், தங்களது எல்லைக்குட்பட்ட வனப்பகுதிகளில் நடைபெறும் மரக்கடத்தல், மரங்களை வெட்டுதல் மற்றும் சமூக விரோத செயல்கள் குறித்த தகவல்களை எப்போதும் மூடி மறைப்பதிலேயே குறியாக உள்ளனர்.
செய்தியாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பினாலும், பார்த்து சொல்கிறோம் என மழுப்பலான பதிலையே கூறித் தட்டி கழிக்கின்றனர். அன்றைய தினம் நடைபெற்ற தர்ணா போராட்டம் குறித்து தகவல் கேட்கத் தொடர்புகொண்ட செய்தியாளர்களிடம் தொலைபேசியை கூட சரியாக கையாளாமல் அலட்சிய போக்குடன் பதிலளித்துள்ளனர்.
வன உயிரினங்களையும், பாரம்பரிய கால்நடைகளையும் பாதுகாக்க வேண்டிய வனத்துறையினரே பல்வேறு உயிரினங்களின் அழிவிற்கும் தொழிலாளர்களின் வாழ்வாதார சிதைவிற்கும் மூலக்காரணமாக இருப்பது வேதனையளிக்கிறது.
எனவே, இந்த விவகாரத்தில் தேனி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வன அலுவலரும் (DFO) உடனடியாக நேரடியாக தலையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
எவ்வித இடையூறும் இன்றி பாரம்பரிய மலை மாடுகளை மேய்ப்பதற்கு தேவையான நிரந்தர மேய்ச்சல் லைசன்ஸை உடனடியாக வழங்கி, சம்பந்தப்பட்ட சங்கத்தினரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
Hindusthan Samachar / Durai.J