Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு சற்று குறைந்ததன் எதிரொலியாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று (ஆகஸ்ட் 7) காலை 6 மணி நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15,000 கனஅடி (கியூசெக்ஸ்) தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்திலும் சரிவு ஏற்பட்டுள்ளது.இ
ருப்பினும், காவிரி ஆற்றில் தொடர்ந்து கணிசமான அளவில் தண்ணீர் வருவதால் நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலு எல்லைப் பகுதியில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர். அதே நேரத்தில், ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அடிப்படையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்திலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் நிலைமையை நீர்வளத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam