Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
2026 ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவுள்ள இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் முப்படைகள் மற்றும் காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு ஒத்திகை இன்று
(ஆகஸ்ட் 7, 2026) அதிகாலையில் தொடங்கியது.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் ஜோசப் விஜய் முதன்முறையாக சென்னை தூய ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி உரையாற்ற உள்ளார்.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் நடைபெறும் இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள், விழா சிறப்படைய மேற்கொள்ளப்படும் மிக முக்கியப் பயிற்சியாகும்.
அந்த வகையில் சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள பிரம்மாண்டமான அணிவகுப்பு மரியாதைக்காக தமிழக காவல்துறையின் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் தீவிர ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அதிகாலை முதலே காமராஜர் சாலையில் தொடங்கிய இந்த ஒத்திகையில், சீரான நடை, கம்பீரமான அசைவுகளுடன் வீரர்கள் அணிவகுத்துச் சென்றது காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.
இந்த ஒத்திகையில் குதிரைப்படை வீரர்களின் கம்பீர அணிவகுப்பு, பெண் காவலர்களின் சிங்கப்பெண்கள் படை, அதிரடிப்படையினர், சிறப்பு காவல் படை, ஆயுதப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்டனர்.
வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழா அணிவகுப்பை சிறப்பாக நடத்துவதற்காக காவல்துறை உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b