Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லடாக்கில் இந்திய ராணுவ பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் நந்தா (25)-வின் உடல், அவரது சொந்த ஊரான கல்வாசல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த கோபு – தங்கம் தம்பதியினருக்கு ராஜு, நந்தா என இரண்டு மகன்களும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். இதில் ராஜு மற்றும் நந்தா ஆகிய இருவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
நந்தா கடந்த 2023ஆம் ஆண்டு அக்னிவீரர் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் இணைந்தார். பின்னர் லடாக்கில் இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி லடாக் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் நந்தா சிக்கி படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, நந்தாவின் உடல் ராணுவ வாகனம் மூலம் இன்று அவரது சொந்த கிராமமான கல்வாசலுக்கு கொண்டு வரப்பட்டது.
வீட்டின் முன்பு உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
நந்தாவின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்ட நிலையில், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திரளாக வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, ராணுவ வீரரின் உடல் ராணுவ வாகனத்தில் வைத்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மயானத்தில், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, நந்தாவின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் உயிரிழந்த இளம் ராணுவ வீரர் நந்தாவின் மறைவு, அவரது சொந்த கிராமமான கல்வாசல் மட்டுமின்றி ஆரணி பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P