அரசு ஐடிஐ பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு – முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற பட்டதாரிகளுக்கு ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் எஹிமே-நிசான் நிறுவனம் இடையே
Nn


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற பட்டதாரிகளுக்கு ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் எஹிமே-நிசான் நிறுவனம் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

தமிழ்நாட்டில் தற்போது 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

அரசு ஐடிஐகளில் பிட்டர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், வெல்டர், கணினி உள்ளிட்ட பாரம்பரிய தொழிற்பிரிவுகளுடன், தொழில் 4.0-க்கு ஏற்ப அட்வான்ஸ்டு சி.என்.சி., ரோபோடிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

2026–27 கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் இதுவரை 80 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.

நேரடி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 95 சதவீதம் பேர் முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி,

இளைஞர்களுக்கு சர்வதேச வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியின் முதல் கட்டமாக, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆட்டோமொபைல் தொழிற்பிரிவில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு தொழில்நுட்பப் பயிற்சி அளித்து, ஜப்பானில் ஆட்டோமொபைல் சர்வீஸ் டெக்னீசியன்களாக வேலைவாய்ப்பு வழங்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பட்டதாரிகளுக்கு எஹிமே-நிசான் நிறுவனம் ஆறு மாத ஜப்பானிய மொழிப் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் போக்குவரத்து செலவுகளை ஏற்கும்.

மேலும், ஜப்பான் சென்ற பின்னர் மொழிப் பயிற்சி செலவுகள், ஆவணத் தயாரிப்பு உதவி, மருத்துவப் பரிசோதனை மற்றும் விசா கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ