Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச)
UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் அதிகாரம் தொடர்பான மசோதாவை எந்தவித விவாதமும் இன்றி மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாக குற்றம்சாட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வணிக ஆலோசனைக் குழுவில் (BAC) இந்த மசோதா குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், அந்தக் கோரிக்கையை முற்றிலும் புறக்கணித்து எந்தவித விவாதமும் இன்றி மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஜூலை 20-ஆம் தேதி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதாகவும், அதற்கு பதிலளிக்காமல் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாது மசோதாவை அவசரமாக நிறைவேற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு இணங்க செயல்படும் மத்திய அரசு, UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் அதிகாரத்தைப் பெறுவதன் மூலம், இந்திய ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பணப் பரிவர்த்தனைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்ற பெயரில் பொதுமக்களின் பணத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக செயல்படுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ