Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வனத்துறையின் நடவடிக்கையை கண்டித்து, மலை கிராம மக்கள் இன்று மீண்டும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, வருசநாடு பகுதியின் 9 ஊராட்சிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற்று வந்த தங்களுக்கு, கடந்த சில ஆண்டுகளாக எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் வனத்துறையினர் தடை விதித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை எதிர்த்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மலை கிராம மக்கள், இன்று வருசநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். கடமலை–மயிலை ஒன்றியம் முழுவதும் ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, அனைத்து கிராமங்களிலிருந்தும் குடும்பம் குடும்பமாக மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திரண்டுள்ளனர்.
வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிரான இந்தப் போராட்டம் காரணமாக மலை கிராமங்கள் முழுவதும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam