Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச)
கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நீட் உள்ளிட்ட பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அல்லாமல், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்கள் அல்லது அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயிக்கும் சேர்க்கை முறையின் அடிப்படையில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆகஸ்ட் 6, 2026 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் (VCI), 2026–27 கல்வியாண்டு முதல் BVSc & AH படிப்புகளுக்கான சேர்க்கையை பொது நுழைவுத் தேர்வு அல்லது மாற்று ஏற்பாடாக நீட் (NEET UG-2026) தரவரிசை அடிப்படையில் நடத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும், இந்த முறை கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை உறுதிசெய்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடை மருத்துவக் கல்வி என்பது ஒரு தொழில்முறைப் படிப்பு மட்டுமல்ல; மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு, பால்வள வளர்ச்சி மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் அடித்தளம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் விவசாயிகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாக உருவாகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2007–08 கல்வியாண்டு முதல் தமிழ்நாடு தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்திருப்பதையும், நீட் போன்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் தடைகளை உருவாக்குவதாக மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வை நடத்துவதில் தேசியத் தேர்வுகள் முகமை (NTA) பல்வேறு சிக்கல்கள் மற்றும் முறைகேடுகளை சந்தித்திருப்பதையும், 2024-ஆம் ஆண்டு வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரம் சிபிஐ விசாரணை வரை சென்றதையும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இத்தகைய சூழலில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் நீட்டை அறிமுகப்படுத்துவது பொருத்தமல்ல என்று தெரிவித்துள்ளார்.
நுழைவுத் தேர்வுகள் பள்ளிக் கல்வித் திறனை விட, பயிற்சி மையங்களுக்கான அணுகல், பொருளாதார வசதி மற்றும் பலமுறை தேர்வு எழுதும் வாய்ப்பு போன்றவற்றையே அதிகம் பிரதிபலிப்பதாக சமீபத்திய அனுபவங்கள் காட்டுகின்றன என்றும், அதே பாதிப்புகள் கால்நடை மருத்துவச் சேர்க்கையிலும் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புற பொருளாதாரத் தேவைகள் வேறுபடுவதால், கால்நடை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை அளவுகோல்களை மாநில அரசுகளே தீர்மானிக்க அனுமதிப்பதே கூட்டாட்சி தத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் ஏற்றதாக இருக்கும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தி, BVSc & AH மாணவர் சேர்க்கையை மேல்நிலைப் பள்ளி மதிப்பெண்களின் அடிப்படையில் தொடரவோ அல்லது அந்தந்த மாநில அரசுகள் தங்களது சேர்க்கைக் கொள்கையைத் தீர்மானிக்க அனுமதிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ