ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
ராமநாதபுரம், 07 ஆகஸ்ட் (ஹி.ச.) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று சுமார் 500 மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்று கட்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்
Fishermen


ராமநாதபுரம், 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று சுமார் 500 மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்று கட்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 11 பேரை கைது செய்து உள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்திய போது மீனவர்கள் தங்கள் மீன் பிடிக்க வந்த படகு பழுது அடைந்ததன் காரணமாகவே எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து இலங்கை கடப்படையினர் முறையாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை கைது செய்வது தொடர் நடவடிக்கையாக இருந்து வருவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 11 ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது

நேற்று இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 11 மீனவர்கள் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அவர்களை விசாரித்த நீதிபதி வருகிற 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN