Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
தனியார் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர், பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர். சுந்தர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அவரது அலுவலகத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து மிரட்டியதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக பி.ஆர்.சுந்தரின் மனைவி மங்கையர்க்கரசி மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த புகாரின் பேரில் சென்னை ஐஸ் ஹவுஸ் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, பெங்களூருவில் பதுங்கியிருந்த பி.ஆர். சுந்தர் மற்றும் அவரது மனைவியை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சைதாப்பேட்டை 18-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர். அப்போது பி.ஆர். சுந்தர் தரப்பு வழக்கறிஞர், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் போடப்பட்ட பொய் வழக்கு என்றும், அவர்களைக் காவலில் வைக்கக் கூடாது என்றும் வாதாடினார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் நீதிமன்றக் காவலில் (சிறையில்) வைக்க மறுத்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டு நேற்று இரவே வீடு திரும்பினர்.
Hindusthan Samachar / vidya.b