தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் - வீரபாண்டியன்
விழுப்புரம், 07 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசத்தை காப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் பிரச்சார நடைப்பயணம் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை பகுதியில் தொடங்கியது. இந்த நடைப் பயணத்தை இந்திய க
CPI Veerapandian


விழுப்புரம், 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசத்தை காப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் பிரச்சார நடைப்பயணம் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை பகுதியில் தொடங்கியது.

இந்த நடைப் பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

இன்று தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் இந்த பிரச்சார பயணம் நடைபெறவுள்ளது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு, கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி, சிறு, குறு தொழில்களுக்கு தனி நல வாரியம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரச்சார நடைபயணம் நடைபெறுகிறது.

நடைப் பயணத்தை தொடங்கி வைத்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

வேளாண் பட்ஜெட் குறித்த கேள்விக்கு,

கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற வேண்டும். புதிய அரசு நிதி இல்லாமல் சிரமப்படுகிறது. ஒன்றிய அரசு நிதி தர வேண்டும். விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது தான் பட்ஜெட் முழு வடிவம் பெறும்.

எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். நாடாளுமன்ற ஜனநாயக வடிவம் என்பது பிரதமருக்கு என்ன பொறுப்பு உள்ளதோ, அதே பொறுப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும் உள்ளது. முதல்வருக்குள்ள அதே பொறுப்பு, எதிர்க்கட்சிக்கும் உண்டு. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல். எதிர்க்கட்சி இல்லாவிட்டால் ஆளும் கட்சி பொருள்படாது. மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைகளை, கேள்விகளை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேட்கும் போது முதல்வர், அவை முன்னவர், அமைச்சர்கள் பதில் அளிக்கலாம். ஜனநாயகத்தில் எல்லோரும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். பதில் சொல்லக்கூடாது என்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அணுகுமுறை நல்ல அணுகுமுறை. முந்தைய அரசு கடைப்பிடித்த அதே நிலையை தான் இந்த அரசும் கடைபிடிக்கிறது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாடு தனது உரிமைக்காக ஒற்றுமையாக உள்ளது என்பதை அறிவிக்க வேண்டும். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரும் தமிழ்நாடு நலனில் அக்கறையாக உள்ளனர். இந்த பிரச்சனையில் ஒன்றுபட்டு இருப்பதுதான் நல்லது.

கல்விக்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டும். கல்வி, மருத்துவத்தின் பொறுப்பு முழுக்க அரசு சார்ந்தது. அதன் பெயர் தான் சமூக நல அரசு. இந்த பொறுப்பில் இருந்து ஒன்றிய அரசு விலகிக்கொண்டது. மாநில அரசுகளையும் விளக்கச்சொல்லி நிர்பந்திக்கிறது. கல்வியும், மருத்துவமும் முழுவதும் அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும்

என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN