டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் போலீசில் புகார் அளிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் தொகைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நுகர்வோர் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கூடுதல் தொகை வசூல
உயர்நீதிமன்றம்


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் தொகைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நுகர்வோர் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கூடுதல் தொகை வசூலிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “மாநில அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் மதுபானக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது?” என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள டாஸ்மாக் கடைகளில் காவலர்களை பணியமர்த்துவது தொடர்பாக உள்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

“நுகர்வோர் கூடுதல் தொகையை கொடுப்பதால்தான் கடை ஊழியர்கள் அந்தத் தொகையை கேட்கின்றனர்” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பாக நுகர்வோர் காவல்துறையில் புகார் அளித்தால், அந்தப் புகாரின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மனுதாரர் அளித்த புகாரை விசாரித்து, அதன் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P