ஒரு அரசு வைக்கும் பெயரை இன்னொரு அரசு மாற்றுவது அவ்வப்போது நிகழ்வதுதான் – தொல்.திருமாவளவன்
கடலூர், 07 ஆகஸ்ட் (ஹி.ச.) கடலூர் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி மண்டலங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூற
திருமாவளவன்


கடலூர், 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடலூர் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி மண்டலங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறவுள்ள மாநாடு, பிறமொழி பேசும் தேசிய இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க உறவைப் பேணிப் பாதுகாப்பதையும், ஒவ்வொரு மாநிலத்திற்குமான மாநில சுயாட்சி கோரிக்கையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

தமிழ் தேசியம் என்பது பிறமொழி பேசுவோருக்கு எதிரான வெறுப்பு அரசியலாக முன்னெடுக்கப்படக் கூடாது. இனத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை விதைக்கக் கூடாது என்பதற்காகவே இந்த மாநாட்டை நடத்த முடிவு செய்தோம்.

தேர்தலுக்கு முன்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது ஆகஸ்ட் 17-ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது என்றார்.

நாளை முதலமைச்சர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது என்பதனை சுட்டிக்காட்டியவர், நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறை தொடர்பான சட்டத்தை தற்போதைய சூழலில் இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படக் கூடாது என்றும், மாநிலங்களுக்கு தேவையான மற்றும் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முதலமைச்சர் சட்டப்பேரவையில் முன்மொழிந்துள்ள தனித் தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாகவும் கூறினார்.

அரசுத் திட்டங்களின் பெயர் மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்,

இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. இது முதல் பட்ஜெட். அடுத்தடுத்து வரும் பட்ஜெட்டுகளில் எதிர்பார்க்கக்கூடிய பல அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் வரும். நிறைவேற்றுவோம் என்ற உறுதியை அளித்துள்ளனர். கட்டாயம் நிறைவேற்றுவார்கள் என்றார்.

தொடர்ந்து, திட்டங்களின் பெயர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,

ஒரு அரசு வைக்கும் பெயரை இன்னொரு அரசு மாற்றுவது என்பது அவ்வப்போது நிகழக்கூடிய ஒன்று தான்.

திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவதால் என்ன நடந்துவிடப் போகிறது?

என அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam