'வெற்றி' தறி விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம் - முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழக நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ''வெற்றி'' தறி விற்பனை நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்படுகின்றன. 12-வது தேசிய
'Vetri' Handloom Sales Outlets Launch Today


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழக நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'வெற்றி' தறி விற்பனை நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்படுகின்றன.

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள சிறப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தின் பாரம்பரிய கைத்தறி நெசவுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்த வெற்றி விற்பனை நிலையங்கள் தொடங்கப்படுகின்றன.

இதன் மூலம் தமிழக நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவாகும் தரமான கைத்தறி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்லப்படும்.

தற்போது இயங்கி வரும் வழக்கமான கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் இருந்து மாறுபட்டு, குறிப்பிட்ட சில உயர்தர பிரீமியம் கைத்தறிப் பொருட்கள் மட்டும் பிரத்தியேகமாகக் கிடைக்கும் வகையில் இந்த 'வெற்றித் தறி' நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இது நெசவாளர்களுக்கு கூடுதல் லாபத்தையும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான பொருட்களையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் கைத்தறிப் பொருட்களின் கண்காட்சியைப் பார்வையிடும் முதல்வர் விஜய், மாநில அளவில் சிறந்த நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான அரசு விருதுகளையும் வழங்கி கௌரவிக்கிறார்.

Hindusthan Samachar / vidya.b