Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெத்திக்குட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் வழக்கம் போல் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக காரின் அனைத்து கதவுகளும் தானாக மூடிக்கொண்டன. சிறுவனுக்கு உள்ளிருந்து கதவைத் திறக்கத் தெரியாததால், அவன் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டான்.
நீண்ட நேரம் காருக்குள் சிக்கியிருந்ததால் ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவனது அலறல் சத்தம் வெளியே கேட்காததால், அவனை யாரும் உடனடியாக கவனிக்கவில்லை.
பின்னர் பெற்றோர் காரைத் திறந்து பார்த்தபோது, சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு விபரீதமாக மாறி சிறுவனின் உயிரைப் பறித்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b