காவிரி டெல்டாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேக்கமான நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச) காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாகவும், அவற்றை உடனடியாக கொள்முதல் செய்ய
Anbumani


N


சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச)

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாகவும், அவற்றை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாகவும், உழவர்கள் அரும்பாடுபட்டு அறுவடை செய்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யாதது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, குடவாசல், நன்னிலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கொள்முதல் நிலையங்களில் இந்த நிலை நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல போதிய சரக்குந்துகள் வராததால், அவற்றை கிடங்குகளுக்கு அனுப்ப முடியவில்லை என்றும், இதன் காரணமாக புதிதாக கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் முதலில் கிடங்குகளுக்கும், அங்கிருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்பட வேண்டும். இந்தப் பணிகள் சங்கிலித் தொடர் போல தொடர்ந்து நடைபெற வேண்டிய நிலையில், அந்தச் சங்கிலித் தொடர் அறுபட்டுள்ளதாகவும், இதனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு அரசின் அலட்சியமும், போதிய திட்டமிடல் இல்லாததுமே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு பாதுகாப்பான கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாவிட்டால் அவை முழுமையாக வீணாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

வறட்சி காரணமாக குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகள் வீணாவதை அரசு அனுமதிக்கக் கூடாது என்றும், கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை விரைவாக கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ